Posts

NLP

NLPயில் சிறக்க 6 யோசனைகள்

 

என்.எல்.பி- யில் தேர்ச்சி பெற யோசனைகள

nlp

 

 

1. நோக்கம்
என்.எல்.பி பயில வருபவர்களில் பலர் வெறும் ஆர்வம் காரணமாக வருபவர்களே.
புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தில் உள்ளே வந்ததும் என்.எல்.பி-யாக அவர்களை ஏதோ புதுவிதமாக மாற்றிவிடும். அவர்களுக்குள் புதுமையை புகுத்திவிடும் எனக் கருதி சோம்பி இருந்து விடுகின்றனர்.
புத்தகங்களைப் படிக்கும்போதோ, பயிற்சி வகுப்புகளில் சேரும்போதோ பொத்தாம் பொதுவாக இருந்து விடுகிறார்கள். அப்படி இருப்பதால் பயிற்சி வகுப்பு முடிந்தபின்னே கற்றுக்கொண்டவற்றை எப்படி நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து கொண்டு பயன் அடைவது என தெரியாமல் நாளாக நாளாக மறந்தும் போகிறார்கள்
ஒரு நோக்கம் இருக்கும்போது முயற்சிக்கு திசை கிடைக்கும். பயிற்சி செய்ய ஊக்கம் கிடைக்கும். முன்னேற்றத்தின் அளவை புரிந்து கொள்ள முடியும்.
மேலும் என்.எல்.பி என்பது செய்து பார்த்து பலனை அனுபவிக்கும்போதே

அதன் விசேஷத்தன்மையும் ஆச்சர்யங்களையும் புரிந்து கொள்ள முடியும்.
பொத்தாம் பொதுவாக முன்னேற்றத்துக்கு என சொல்லாதீர்கள். குறிப்பிட்ட பலனை பெற விழையுங்கள். உதாரணத்திற்கு,
நம்பிக்கை பெற,
தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள,
சலிப்பு மனப்பான்மையை போக்கிக் கொள்ள,
கோபத்தைக் குறைக்க,
தொழிலில் சிறக்க,
உறவுகள் மேம்பட,
சந்தோஷம் பொங்கிட,
என ஏதோவொரு பலனை என்.எல்.பி யால் அடைய வேண்டும் என முடிவெடுத்து பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது பலன் கிடைக்கும்.
கிடைத்த பலனே உற்சாகம் ஊட்டி அடுத்த இலக்கை அடைய வழி வகுக்கும். ஒரு வெற்றி மற்றொரு வெற்றிக்கு தூண்டுகோலாக அமையும்.
எனவே என்.எல்.பி பயில வருபவர்கள் ஒரு இலக்கு வைத்துக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொள்வது சிறப்பு.
எதற்காக என்.எல்.பி படிக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யுங்கள்

 

2. தீர்மானமாக இருத்தல்.

எதற்காக என்.எல்.பி படிக்கிறீர்கள் என்பதை முடிவு செய்த பின் அதை அடைந்தே தீருவது என்ற தீர்மானமான உள்ளத்தோடு இருக்கும்போதே விருப்பம் செயல் வடிவம் பெறுகிறது.
இதற்கு ஒரு அர்ப்பணிப்பு மனப்பான்மை வேண்டும். உங்களையே பயிற்சிக்கு அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
தினம் 10 நிமிடமாவது என்.எல்.பி பற்றி சிந்திப்பது, படிப்பது, என ஆரம்பித்து பயிற்சிக்கு என ஒரு 30 நிமிடம் ஒதுக்கி ஈடுபட வேண்டும்.
ஒரே நாளில் நட்சத்திரங்களை எண்ணிவிட வேண்டும் என்போரே அதிகம்.
விதைத்ததும் மரமாவது வித்தையில் ஆகலாம் வாழ்க்கையில் ஆகாது.
மந்திரத்தில் மாங்காய் முளைக்காது என்ற பழமொழியை நினைவில் கொள்க.
பயிற்சியில் நம்பிக்கை; முயற்சியில் நம்பிக்கை.
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
ஆசைப் பட்டாலும் பல பேர் என்.எல்.பி-யின் விசேஷ பலன்களை அனுபவிக்க முடியாமல் போவதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இல்லாமல் போவதே. பொறுமையும் பொறுப்புணர்வும் இருந்து விட்டால் என்.எல்.பி பல அற்புதங்களைத் தருவதை உணரலாம்.

குறள் வாக்கு என்ன?
“ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவுயிலா
ஊக்கம் உடையான் உழை”

தளர்ச்சி இல்லாமல் சலிப்பு இல்லாமல் ஊக்கத்தோடு உழைப்பவனை செல்வம் தேடிச் செல்லும் என்கிறார் திருவள்ளுவர்.

எனவே திட்டமிட்டு குறைந்தது ஒரு மாத அவகாசம் கொடுத்து நம்பிக்கையோடு காத்திருங்கள்.
பலன் நிச்சயம் கிடைக்கும்.
வாழ்க்கை சிறக்கும்.
மகிழ்ச்சி பொங்கும்.

 

3. சுய பாராட்டு


எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதில் ஏற்றம் இல்லை.
என்.எல்.பி பயிற்சிக்குள் வரும் பலபேர் பலன் உடனே கிடைத்திட வேண்டும்.
பயிற்சி செய்வதற்கு  விருவிருப்பாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுகொள்கிறார்கள்.
பல சமயங்களில் என்.எல்.பி பயிற்சி அது செய்கின்ற முறையில் ஆஹா என திகில் ஆக இருக்கும் என சொல்ல முடியாது. ஆனால் பலனில் அது அதிசயத்தை நிகழ்த்துவதே. எனவே பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர் அவரவர் பணியிடங்களுக்கு சென்ற பின்னர் அவர்களாகவே பயிற்சியைத் தொடர்வது என்பது குதிரை கொம்பாகிவிடுகிறது.
எனது பயிற்சி வகுப்புக்கு வருபவர்களில் பெரும்பாலோர் கேட்கும் ஒரே கேள்வி, “ இதை நான் தினம் செய்ய வேண்டுமே? அதுதான் பெரிய சவால். அதுவும் 30 நாள் செய்யணுமே.. எல்லா நாளும் செய்ய முடியுமா தெரியல்லை? 30 நாளும் மறக்காமல் செய்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?’ என்பார்கள்.
வேதனையான வேடிக்கை இது.
அவநம்பிக்கையில் வெளிப்படுத்தும் தன்னிலை விளக்கம்.
ஒரு நாள் செய்து விட்டு
மறுநாள் மறந்து விட்டு
மூன்றாம் நாள் ‘நேற்று செய்யவில்லையே’ என சலித்துக் கொள்வதில் செலவிட்டு விட்டு,
நான்காம் நாள் வழக்கம்போல் தன்னைக் கடிந்து கொண்டி விட்டு,
ஐந்தாம் நாள் நம்பிக்கை இழந்து விட்டு
ஆறாம் நாள் பின்னாளில் ஒரு நாள் மீண்டும் தொடங்கலாம் என சமாதானப் படுத்திக் கொண்டு
ஏழாம் நாள் மறந்தே போய்விடுவார்கள்.
மீண்டும் ’பழைய குருடி கதவைத் திறடி’’ கதைதான்.
எனவே ஒரு நாள் பயிற்சியை செய்து முடித்ததும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். பரிசு கொடுத்துக் கொள்ளுங்கள்,
நடுவில் ஒரு நாள் செய்யமுடியாமல் போனால் கடிந்து கொள்ளாமல் மன்னித்து மீண்டும் செய்யத் தொடங்குங்கள்.
சுய பாராட்டே சிறந்த பாராட்டு.

4.  நாள் திட்டம்
24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில் ஒரு 20 நிமிடம் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கிறது உங்களுக்கு என்றால் எவ்வித புது முயற்சியும் உங்களால் முடியாது என்றுதான் அர்த்தம்.
செக்கு மாடுபோல செய்ததையே செய்து கொண்டிருப்பவர் நீங்கள்.
செய்ததையே செய்து கொண்டிருந்தால் கிடைத்த பலனேதான் கிடைத்துக் கொண்டிருக்கும்.
ஆகவே புதிய பலன்களுக்கு புது முயற்சி தேவை.
புது முயற்சிக்கு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு கூடவே எப்படி செய்யப் போகிறோம் எப்போது செய்யப் போகிறோம் என்ற கணக்கும் தேவை
எனவே ஒரு நாளில் என்.எல்.பி பயிற்சிக்கென, அல்லது வாசிப்புக்கென நேரம் கண்டிபிடித்து செய்ய வேண்டும்.
எங்கே கவனம் இருக்கிறதோ அங்கேதான் நமது திறன் செலவாகிறது.
அன்றாடப் பணியை திட்டமிட்டால்தான் என்.எல்.பி பயிற்சியை செய்ய ஞாபகம் இருக்கும்.

செய்து பார்க்கும்போதுதான் பலன் என்ன எப்படி இருக்கிறது என புரிய ஆரம்பிக்கும்.
அதன் அடிப்படையில் ஒரு நாள் பணியை எப்படி திட்டமிட்டு என்.எல்.பி பயிற்சிக்கென நேரம் ஒதுக்கலாம் என்ற துல்லியம் மனசுக்குப் பிடிபடும்.
எனவே திட்டமிட்டு செயல் படுதல் அவசியம்.
புரிக செயல் புரிக செயல் புரிக செயல் என்பது பாரதி கூற்று

5. உதவியை நாடுதல்

 இந்த உலகில் மனிதன் தனித்து விடப்படவில்லை.
ஆம். பிரபஞ்சப் பேரறிவு அவனுக்குத் துணை நிற்கிறது.
திறந்த மனத்துடன் நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு பிரபஞ்சப் பேரறிவு தூண்டுகோலாய் நிற்கிறது. மறைபொருளாய் நின்று வலிமை தருகிறது.
எனவே பயிற்சியில் நம்பிக்கை வைத்து ஈடுபாட்டோடு முயற்சி செய்யும்போது பிரபஞ்சப் பேரறிவு உள்ளுணர்வு மூலமும் ஞானச்செல்வததை வாரி வழங்குகிறது.
மேலும் படித்ததில் சந்தேகம் ஏற்பட்டால் என்.எல்.பி அறிந்தவர்களை நாடி விளக்கம் பெறுதல் நல்லது.
சந்தேகத்திலிருந்து தெளிவு பெற உதவி கேட்கத் தயக்கம் காட்டுவது நமக்குத்தான் இழப்பு.
எந்த விஷயததையும் முழுமையாக அறிந்தவர் என்று யாரும் இல்லை. எல்லோருமே அவரவர் நிலையில் ஒரளவு தெளிவு பெற்றவர்தான்.
அல்லது என்.எல்.பி உத்திகளை செய்து பழக ஒரு கூட்டாளி தேவைப் பட்டால் நண்பர்கள் சொந்தங்களிடம் தயக்கப்படாமல் உதவி கேட்கவும்.
’தயக்கம்தான் தடை. அதை உடனே உடை’

6.குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்
கேட்ட எந்த விஷயமும் அப்படியே நினைவில் இருக்குமா என்பது கேள்வி குறியே.
படித்ததில் பிடித்தது, பளிச்சென இருக்கும் வாசகங்கள், முக்கியமான அறிவுரைகள்,கூற்றுகள், யோசனைகள் போன்றவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளுதல் பின்னால் நினைவு படுத்திப் பார்ப்பதற்கும், மனதில் பதிய வைத்துக் கொள்வதற்கும் பேருதவியாக இருக்கும்.
குறிப்பெடுத்தவைகளை மட்டும் அசைபோடும்போது முழு கருத்தும் மீண்டும் நினைவுக்கு வந்து கருத்து இன்னும் ஆழமாக பதிய வாய்ப்பு இருக்கிறது.
அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்பது நமக்குத் தெரியும்
என்.எல்.பி-யை பொறுத்தவரை அறிவால் அறிவதை விட அனுபவத்தால் உணர்வதே பலம் அளிக்கும் பலன் அளிக்கும்.
எனவே பயிற்சியின் துல்லியம் கூடக் கூட நிபுணத்துவம் பெறலாம்.

மீண்டும் சுருக்கமாக
1) நோக்கம் – ஏன் என்.எல்.பி பயில வேண்டும்

2) அர்ப்பணிப்பு – பயிற்சிக்கு உங்களை முழுசாய் ஈடுபடுத்திக் கொள்ளல்

3) சுய பாராட்டு – சிறிது செய்தாலும் உங்களை பாராட்டிக் கொள்ளுதல்

4) திட்டமிடுதல் – அன்றாடம் கவனமாக என்.எல்.பி க்கு நேரம் ஒதுக்குதல்

5) உதவி நாடுதல் – அறிந்தவர்களிடம் ஐயம் தெளிவுறுதல்

6) குறிப்புகள் – முக்கிய கருத்துகளை குறித்து கொண்டு மீண்டும் வாசித்தல்

மேற்சொல்லியிருக்கும் ஆறு விஷயங்களை மனதில் கொள்க. நடைமுறைப்படுத்துக. என்.எல்.பி-யில் தேர்ச்சி பெற்று வாழ்க்கையை வசப்படுத்தலாம்.